திருவள்ளூர்: கடந்த இரண்டு மாதங்களாக பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போவது குறித்து புகார்கள் வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில், ஊத்தூக்கோட்டை துணை கண்காணிப்பாளர் சாரதி தலைமையில் வெங்கள் காவல் ஆய்வாளர். ஜெயவேல், பெரியபாலையம் உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ், காவலர்கள் நாகராஜ், அருணகிரி செல்வராஜ் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு அதனடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் செங்காத்துகுளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதில் சந்தேகம் அடைந்த தனிப்படை காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்ததில் பெரியபாளையம் ஊத்துக்கோட்டை ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் திருடுபோன இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அதனையடுத்து அவர்களிடமிருந்து 25 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ். ராஜ்குமார் பூவரசன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.