திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு என்கிற சந்திரமோகன் (45). இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. நடிகர் உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகியாகவும் உள்ளார். சந்திரமோகன் இன்று காலை தனது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் தேவி தியேட்டர் பாலம் அருகே சென்றபோது, திடீரென காரில் அங்கு வந்த மூன்று பேர் சந்துருவை வெட்டிப் படுகொலை செய்தனர்.
ஆத்திரம் தீராத அவர்கள் தலையை தனியாக வெட்டி எடுத்துக் கொண்டு, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
சந்திர மோகனை வெட்டும் பொழுது கையிலிருந்த குழந்தைக்கு காயம் ஏற்பட்டதால் ஸ்ரீரங்கம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
சந்திரமோகன் கொலை செய்து தலையை எடுத்து சென்ற சுரேஷ், சரவணன், செல்வகுமார் ஆகிய மூன்று பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு தன் தந்தையைக் கொன்றதற்கு பழி வாங்கும் வகையில் நண்பர்களுடன் சேர்ந்து கொன்றதாக கொலையாளிகளில் ஒருவர் தெரிவித்ததாக முதல்கட்ட விசாரணைத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.