திருச்சி: புதுக்கோட்டை அருகே ஆடு திருடியவர்களை பிடிக்க விரட்டி சென்றபோது திருச்சி நாவல்பட்டு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திரு.பூமிநாதன் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் உடனடியாக அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடம் அருகே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருச்சி மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் திரு.பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை இன்று தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தஞ்சை, புதுக்கோட்டையை சேர்ந்த 10 வயது, 17 வயது சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞர் உட்பட 4 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
