திருச்சி: திருச்சி ஆழ்வார் தோப்பு பகுதியில் உள்ள அக்பர் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான 10ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. பல ஆண்டுகாலமாக பராமரிப்பு இல்லாமல் இருக்கும், இந்த இடம் புதர்மண்டி கிடக்கிறது. இந்த புதருக்கு அருகே மாலை நேரத்தில் சில இளைஞர்கள் வந்து அமர்ந்து கஞ்சாவை புகைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர் அங்கு வந்து கஞ்சா அடித்துக்கொண்டிருந்த இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது தான் புதர்களுடன் 4 முதல் 6 அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவர்களை பிடுங்கி எடுத்த இளைஞர்கள் இது தொடர்பாக போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தில்லைநகர் போலீசார் 4 செடிகள் தானே என இளைஞர்களிடம் கேட்டனர். அங்கிருந்த இளைஞர்கள் மேலும் 10க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான செடிகளை பிடுங்கி போட்டனர். இதனைப்பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இன்று அதிகாலை போலீசாரின் உதவியுடன் மாநகராட்சியினர் அந்த இடத்தில் இருந்த புதர்களை அப்புறப்படுத்தினர். திருச்சி மாநகரின் மையப்பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி