திருச்சி : திருச்சி காவல் ஆணையர் திருமதி.M.சத்தியப்பிரியா, இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், செல்போன் மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து, சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த (15.03.23),-ந்தேதி அமர்வு நீதிமன்ற காவல்நிலைய எல்லையில் பணி நிமித்தமாக சென்னை சென்று திருச்சிக்கு வந்தும் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த உணவு பாதுகாப்பு அலுவலரான திரு.வசந்தன் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் தாக்கி அவரிடமிருந்த சுமார் ரூ.10,000/- மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் குற்ற எண்.124/23 U/s 394, 397 இதச-ன்படி வழக்குப்பதிவு செய்தும், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.
தனிப்படையினரின் புலன்விசாரணையில் சந்தேகநபர்களின் நடவடிக்கைளை தீவிரமாக கண்காணித்தும், சந்தேக நபர்களின் விபரங்களை சேகரித்தும், அமர்வு நீதிமன்ற பகுதிகளில் CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த (17.03.23)-ந்தேதி வாகன தணிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது, விசாரணையில் குற்றவாளி சூர்யா வயது (21), த.பெ.மாரிமுத்து மற்றும் இரண்டு சிறார்கள் மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுப்பட்டதை தனிப்படையினர் உறுதி செய்தனர். உடனடியாக குற்றவாளி சூர்யாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும், இளஞ்சிறார் குற்றவாளிகள் இரண்டு நபர்களை காப்பகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரியை கைது செய்த காவல் துணை ஆணையர் தெற்கு சரகம் அவர்கள், காவல் அதிகாரிகள், தனிப்படையினர் மற்றும் புலன்விசாரணையில் துணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்தியப்பிரியா, இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டி, வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்கள்.