திருச்சி: சிங்கப்பூர், துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1.9 கோடி மதிப்புடைய தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமானநிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்று காலை வந்த டைகர் ஏர்வேஸ் விமானத்தில் பேன்ட்டில் மறைத்து வைத்து 152 கிராம் தங்கம் கடத்தி வந்த கடலூரை சேர்ந்த சுரேஷ் சிக்கினார். இதேபோல் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த நாகை மாவட்டம் பழையாறை சேர்ந்த முகமது சாதிக் என்பவரிடம் 1,128 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே விமானத்தில் தஞ்சையை சேர்ந்த முகமது ஜியாவுதீன் சாகிப் என்பவர் உடலில் மறைத்து 896 கிராம் தங்கம் கடத்தி வந்தார். 3 பேரிடமிருந்தும் 2,176 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரம் ஆகும். சிக்கிய 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.M. சிவசங்கர்