திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. பட்டாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்து கடந்த 3 நாட்களாக கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து புதிய சிலைகள் பிரதிஷ்டை, கண் திறத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவையும் நடைபெற்றன. இதனையடுத்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தப்பட்டு பல நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதனையடுத்து அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு