தென்காசி: தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் கடந்த 23.01.2025 அன்று லோடு ஆட்டோ திருட்டு போனதாக காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அடுத்த மூன்றாவது நாளான 26.01.2024 அன்று தென்காசி ரயில்வே பாலத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்ட மற்றொரு TATA ACE லோடு ஆட்டோவும் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதின் அடிப்படையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தென்காசி காவல் ஆய்வாளர் திரு. ராபர்ட் ஜெயின் அவர்களின் அறிவுரைகளின் படி சார்பு ஆய்வாளர் திரு. முத்தமிழ்செல்வன் அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் மேற்படி ஆட்டோ திருட்டு வழக்கினை பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு, கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்தும் குற்றவாளியை அடையாளம் கண்டு அவர்களை தொடர்ச்சியாக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பின் தொடர்ந்து சென்றதில் அவர்கள் புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி வழியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள கரிசல்குளம் பகுதியை சென்றடைந்ததை சுமார் 100 க்கும் மேற்பட்ட CCTV கேமராக்களை சோதனை செய்து ஆட்டோக்களை திருடிய ராஜபாளையம் கரிசல்குளம் பகுதியை சேர்ந்த பொன்னையா பிள்ளை என்பவரின் மகன் பீர் மைதீன் @ மாரியப்பன் 65. மற்றும் அவரது மகனான முகமது ராஜா 24. ஆகிய இரண்டு நபர்களையும் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
இதுகுறித்து அவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணை செய்ததில் மேற்படி நபர்கள் கோவில்பட்டி பகுதியில் ஒரு பயணிகள் ஏற்றிச்செல்லும் ஆட்டோவும் மற்றொரு லோடு ஆட்டோவும் திருடியதும், தேனி பகுதியில் ஒரு பயணிகள் ஏற்றிச்செல்லும் ஆட்டோ திருடியது விசாரணையில் தெரியவந்தது.
மேற்படி திருடப்பட்ட 05 ஆட்டோக்களும் மீட்கப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. மேலும் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளையும் காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறப்பாக புலன் விசாரணை செய்து திருடர்களை கைது செய்து திருடப்பட்ட ஆட்டோக்களையும் பறிமுதல் செய்த தென்காசி காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.