திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீசார் துணை ராணுவ வீரர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் நியமிக்கப்படஉள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கடந்த வாரம் மூன்று கம்பெனிகளை சேர்ந்த 240 துணை ராணுவ வீரர்கள் வந்தனர். இந்த நிலையில் இன்று மேலும் 6 கம்பெனிகளை சேர்ந்த 480 துணை ராணுவ வீரர்கள் திண்டுக்கலுக்கு வந்தனர். இதையடுத்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா இரு கம்பெனியை சேர்ந்த 80 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இரண்டு கம்பெனி துணை வீரர்கள் பறக்கும் படையினருடன் இணைந்து வாகன தணிக்கை உள்ளிட்ட இதர பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் பணியாற்றும் ஆயிரத்து 800 போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட உள்ளனர் .
அதேபோல் முன்னாள் ராணுவ வீரர்கள் ஊர்காவல் படையினரும் போலீசாருடன் இணைந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் 7 தொகுதிகளிலும் போலீசார், துணை ராணுவ வீரர்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் .எனவே பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசாருடன் துணை ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
அதேநேரம் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் மின்னணு எந்திரங்களில் வாக்கு எண்ணும் மையத்திற்கு திரும்பக் கொண்டு வருதல் ஆகியவை முக்கியமான பணிகளாகும். இதற்காக 224 மண்டலங்களுக்கும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் இடம் பெறுகின்றனர். .இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

திரு.அழகுராஜா