திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் லயன் தெருவை சேர்ந்த மனோஜ்குமார், 22. இவர் அந்த வழியாக வரும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் வழிப்பறி செய்வது பணம் பறிப்பது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அந்த பகுதி இளைஞர்களுடன் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28 ம் தேதி இரவு மனோஜ் குமாரால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் 10 க்கும் மேற்பட்டோர் சரமாரியாக அவரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மனோஜ்குமார் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் திண்டுக்கல் – திருச்சி ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்து வந்தனர்.
அப்பொழுது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ரோட்டில் பிணத்தை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலிசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மனோஜ்குமாரின் தந்தை அந்தோணிராஜ் மற்றும் அவரது உறவினர்களிடம் சமாதானம் பேச்சு நடத்தினர்.இதில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தை கைவிடப்பட்டனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் போக்குவரத்தை மாற்று பாதையில் வாகனங்கள் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.