கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் ஆசிரமம் பகுதி அருகே பழையாற்றின் குறுக்கே சோழன்திட்டை தடுப்பணை உள்ளது . அப்பகுதியில் பழையாறு கரையோரமாக புதர் மண்டிய இடத்தில் மனித எலும்புக்கூடுகள் சிதறி கிடப்பதாக தகவல் பரவியது. இது குறித்து தகவலறிந்து வந்த சுசீந்திரம் போலீசார் கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்களை வரவழைத்து அப்பகுதியில் சிதறிகிடந்த எலும்புக்கூடுகளை சேகரித்து கைப்பற்றினர். இந்நிலையில், தனிப்படை போலீசாரின் விசாரணையில் எலும்புக்கூடாக காணப்பட்டவர் கடந்த ஒரு மாதம் முன்பு காணாமல் போனதாக கன்னியாகுமரி காவல்நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் தொடர்புடைய மாதவபுரம் பகுதியை சேர்ந்த மாசானம் என்னும் கண்ணன் என்பது தெரியவந்தது. அத்துடன் அவரை இரண்டு நண்பர்கள் இணைந்து கொலை செய்து வீசி சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் மாதவபுரம் பகுதியை சேர்ந்த பாலன் மற்றும் விக்னேஷ் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நண்பர்களான 3 பேரும் சம்பவத்தன்று மது போதையில் சோழத்திட்டை அணைப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்கே குளிப்பதற்கு முன் மது போதையில் தகராறு நடந்துள்ளது. இதில் பாலன் மற்றும் விக்னேஷ் இருவரும் இணைந்து மாசானத்தை அடித்துள்ளனர். இதில் மாசானம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த இருவரும் மாசானத்தின் உடலை இருசக்கரவாகனத்தில் வைத்து ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிக்கு கொண்டு சென்று வயல் வெளிக்கு அருகாமையில் முட்புதரில் வீசி சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஒரு மாத காலத்தில் உடல் அழுகிய நிலையில் நாய்கள் கடித்து குதறி உடற்பாகங்களை ஆங்காங்கே தூக்கி சென்ற நிலையில் எலும்புக்கூடுகள் சிதறிக்கிடந்துள்ளது. தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் பாலன் மற்றும் விக்னேஷ் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.