சென்னை: கடன் தொல்லை காரணமாக 13 வயது மகளை கொலை செய்து விட்டு தலைமறைவான தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை, கோட்டூர்புரம் அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கீதா கிருஷ்ணன். இவரது மனைவி கல்பனா. வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதில் கீதா கிருஷ்ணன் ஆசிரியராக பணியாற்றி வந்தார். பின்னர் அதைவிட்டு கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதைப்போன்று கல்பனா தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு குணலி ஸ்ரீ (13) மானசா (3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்படவே பல இடங்களில் கீதா கிருஷ்ணன் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாங்கிய கடனை அடைப்பதற்காக கீதா கிருஷ்ணன் தன்னுடைய நண்பர்களிடம் பணம் கேட்டிருந்தார். அவர்களும் தருவதாக கூறிவிட்டு கடைசி நேரத்தில் தங்களிடம் பணம் ஏதும் இல்லை என்று கூறிவிட்டனர். நாளுக்கு நாள் கடன் பிரச்சினை அதிகமாகவே கடந்த 2ம் தேதி 13 வயது மகள் குணலி ஸ்ரீயை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.பின்பு கல்பனா விஷத்தை குடித்து விட்டு தூக்கில் தொங்கி இறந்துள்ளார். இதையடுத்து கீதா கிருஷ்ணன் வீட்டின் வெளியே பூட்டிவிட்டு மூன்று வயது குழந்தையுடன் மாயமாகி விட்டார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 13 வயது சிறுமி படுக்கையில் இறந்த நிலையிலும், பேராசிரியை கல்பனா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். வீட்டில் இரண்டு கடிதங்கள் கிடைத்த கிடைத்தன. அதில் எங்கள் சாவுக்கு கோதண்டபாணி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தான் காரணம். கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விட்டனர் என எழுதப்பட்டிருந்தது என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் தலைமறைவாக இருந்த கீதா கிருஷ்ணனை போலீசார் நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். அவருடன் இருந்த 3 வயது மகளை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வைத்து கீதா கிருஷ்ணனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தோம். மனைவி, மூத்த மகள் இருவரும் இறந்த பிறகு மனம் மாறிவிட்டது. ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று இரண்டு நாள் தங்கி இருந்தேன். பிறகு மயிலாப்பூரில் சுற்றிக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நேற்று முன்தினம் கோயம்பேடு சென்று அங்கிருந்து எங்கே செல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
