தேனி : இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, செல்ஃபி மோகத்தின் தாக்கம் மிகுந்துள்ளது. சாப்பிடுவதற்கு முன் செல்ஃபி, தூங்குவதற்கு முன் செல்ஃபி , எங்காவது வெளியே சென்றால் செல்ஃபி என எங்கே பார்த்தாலும் செல்ஃபி தான். சிலருக்கு செல்ஃபி எடுத்து அதனை போஸ்ட் செய்யாவிட்டால் தூக்கம் கூட வராது. ஆனால், இதுவே பல பேரின் உயிரையும் பறித்துள்ளது.
தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தகூலி தொழிலாளியான திரவியம் செல்ஃபி பிரியராக இருந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
நேற்று அதிகாலை வேலைக்கு செல்வதற்கு முன், தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் அவர் விபரீதமாக செல்ஃபி எடுத்துள்ளார். அதனை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். அதேபோல இரண்டு முறை செல்ஃபி எடுத்துவிட்டு, மூன்றாவது முறையாக செல்ஃபி எடுக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக கயிறு இறுக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தாக தெரிகிறது.
இதுகுறித்த தகவலறிந்த சாக்கோட்டை காவல்துறையினர் திரவியத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர்.