தர்மபுரி: தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். நேற்று தனது 57 வயது பூர்த்திசெய்து 58-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், நேற்று நள்ளிரவு மாரடைப்பால் மரணம்.பிறந்த நாளிலேயே இறந்ததால் காவ்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
பிறந்தநாள் விழாவை கொண்டாடி விட்டு, தூங்கச்சென்ற, தர்மபுரி டி.எஸ்.பி., ராஜ்குமார் மாரடைப்பில் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, சீலியம்பட்டி புதூரை சேர்ந்தவர் ராஜ்குமார், 57; இவர், 1964 செப்., 20ல் பிறந்த அவர், 1987ல் எஸ்.ஐ.,ஆக பணியை துவங்கினார். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், ஒகேனக்கல்லில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டிக்கு எதிராக சிறப்பான நடவடிக்கை எடுத்தார்.
கடந்த, இரு ஆண்டுகளுக்கு முன், டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார். ஓராண்டாக, தர்மபுரி டி.எஸ்.பி.,யாக பணியாற்றினார். அவரது மனைவி சுமதி, ஐந்தாண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மகள் நிவேதா திருமணமாகி கணவருடன் வசிக்கிறார். மகன் செல்வநிஷாந்த் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால், தர்மபுரி டி.எஸ்.பி., அலுவலக வளாக குடியிருப்பில், தனியாக வசித்து வந்த ராஜ்குமார், நேற்று முன்தினம் இரவு, அவரது 57 வது பிறந்த நாளை, சக போலீசார் மற்றும் அலுவலக பணியாளர்களுடன் கொண்டாடினார். பின் இரவு, 12:00 மணிக்கு மேல் தூங்க சென்றுள்ளார். நேற்று காலை, 7:00 மணிக்கு, வழக்கு விபரங்களை அவரிடம் அளிக்க சென்ற போலீசார், அவர் அசைவின்றி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு, ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பிறந்த நாள் கொண்டாடிய நாளில் இறந்ததால், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சோகமடைந்தனர். நேற்று, அவரது சொந்த ஊரில் இறுதி சடங்கு நடந்தது.
கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா, சேலம் டி.ஐ.ஜி., பிரதீப்குமார், தர்மபுரி எஸ்.பி., பிரவேஸ்குமார், சேலம் கூடுதல் எஸ்.பி., பாஸ்கர் உள்ளிட்ட போலீசார், அஞ்சலி செலுத்தினர். மாலை, 4:30 மணியளவில், 21 குண்டுகள் முழங்க போலீசார், அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.