திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியில் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாணவர் மன்றம் சார்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள வரைவு அறிக்கை பல்வேறு தரப்பினராலும் கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறது. இந்த வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி பொன்னேரி அரசு கலைக்கல்லூரி வாயிலில் தமிழ் மாணவர் மன்றம் சார்பில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் மாணவர்கள் நலனுக்கு எதிராக உள்ள யுஜிசி வரைவு அறிக்கையை உடனே திரும்பப் பெற வேண்டும், துணைவேந்தர் நியமனம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்திட வேண்டும், பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிட வேண்டும், நிதிநிலை அறிக்கையில் குறைக்கப்பட்ட மாநில கல்வி நிதியை ஒதுக்கிட வேண்டும், மாநில உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடக்கூடாது, கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெறும் வரை மாணவர்கள் போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு