நெல்லை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை, இன்று (02-12-19) தலைமைச் செயலகத்தில் சந்தித்து, புதுதில்லியில் ஸ்கோச் (SKOCH) அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், திருநெல்வேலி மாநகர காவல்துறை மூலமாக “மக்களை நோக்கி மாநகர காவல்” என்ற புதிய திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வழங்கப்பட்ட ஸ்கோச் வெள்ளி விருதினை, நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ச. சரவணன், காண்பித்து வாழ்த்து பெற்றார்.
நாடு முழுவதும் அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுமையான மக்கள்சார் முன்னெடுப்புகளுக்கு SKOCH அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது .
திருநெல்வேலி மாநகர காவல்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும்
“மக்களை நோக்கி மாநகர காவல்” என்ற புதிய திட்டப் பணிகள் டெல்லியில் நடைபெற்ற “ஸ்கோச்” விருது (SKOCH AWARD) வழங்கும் விழாவில் வெள்ளிப் பதக்கம் பெற்றது.
மக்களை நோக்கி மாநாகர காவல் திட்டத்தின் கீழ்கண்ட மக்கள் நலன்சார் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.
1. மக்களை நோக்கி மாநகர காவல்
ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவர்களது காவல் நிலைய எல்லையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து விழுப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
2.டியர் டிசி – மதிப்புமிகு மாணவன்
இத்திட்டத்தின் படி பள்ளிகளில் மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு அவர்களது பெற்றோர்களை மாணவர்கள் தலைக்கவசம் அணிய வலியுறத்திய பின்னர் அதனை கடிதம் மூலம் டிசிக்கு தெரியப்படுத்த வேண்டும். சிறந்த கடிதங்களுக்கு மதிப்புமிகு மாணவன் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.
3.நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை.
இத்திட்டத்தின் படி வீடுகள், வணிக நிறுவனங்கள் , பள்ள மற்றும் கல்லூரிகள் , மருத்துவமனைகள் , வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் CCTV யின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சாலையை நோக்கி CCTV பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
4. வேர்களைத்தேடி
இத்திட்டத்தின்படி தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் வீடுகளை கணக்கெடுக்கப்பட்டு பட்டா புத்தகம் வழங்கப்படும். காவலர்கள் வாரந்தோறும் சந்தித்து அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றார்கள்.
5 .சமூக ஊடகங்களில் நெல்லை மாநகர காவல்.
இத்திட்டத்தின் படி நெல்லை மாநகர காவல்துறை பேஸ்புக் , டிவிட்டர் , இன்ஸடாகிராம் மற்றும் யூ டயூப் தளங்களில் இயங்கி வருகிறது. மீம்ஸ் மூலம் குற்றத்தடுப்பு மற்றும் விழிப்புணர்விற்காக YouTube channel துவங்கியது நெல்லை மாநகர காவல் துறையே.
மேலும், ரசிகர் மன்றங்கள் மூலம் சமூக நலத்திட்ட பணிகள், அரசு பணிகள் மற்றும் அதற்கான பயிற்சி குறித்த விழிப்புணர்வு , திருநங்கைகள் முன்னேற்ற ஆலோசனைகள் , திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற நடவடிக்கைகளுக்காக இவ்விருது பெறப்பட்டுள்ளது.
புது டெல்லியில் 29-11-2019-ம் தேதியன்று நடைபெற்ற, வண்ணமயமான SKOCH விருது வழங்கும் விழாவில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.ச.சரவணன் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள் விருது பெற்று, தமிழகத்தில் சென்னை காவல்துறைக்கு அடுத்த படியாக விருது பெற்ற பெருமை நெல்லை மாநகர காவல் துறைக்கு உரியதாகும்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்