தஞ்சை: தஞ்சை பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா. ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் படி தஞ்சை தனிப்படை போலீசார்கள் உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மோகன், தலைமை காவலர் திரு.உமாசங்கர் மற்றும் காவலர்கள் திரு.கௌதம், திரு.அருண்மொழிவர்மன், திரு.அழகுசுந்தரம், திரு.நவீன் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை போலீசார்கள் தினசரி தஞ்சை டவுன் மற்றும் புறப்பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சை தனிப்படை போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. அதில் நான்கு மாதங்களாக தஞ்சை புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி உள்ள சிலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும் படி உள்ளதாக தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் தஞ்சை தனிப்படை போலீசார் உடனடியாக அந்த வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்று தங்களுடைய முதற் கட்ட விசாரணையை தொடங்கினார்கள்.
அதில் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தது தந்தது தஞ்சை மாவட்டம் நெடார் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் சொட்டை தியாகராஜன் 55. என்பதும் அதில் தங்கி இருந்தது அவனது கூட்டாளியான தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தாழுக்காவை சேர்ந்த மாடசாமி மகன் கொடுங்கசாமி 55 என்பதும் தெரிய வந்தது.
அங்கு சென்று போலீசார் பார்த்த போது வீடு பூட்டி இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் நெடாரில் வசித்து வரும் சொட்டை தியாகராஜனை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார்கள் இதில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தது நாங்கள் தான் என்றும் இங்கு தங்கிக் கொண்டு சுற்றி உள்ள பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு அந்த வீடுகளில் கொள்ளை அடிப்போம் என்றும் இக் கொள்ளை சம்பவத்திற்கு எல்லாம் மூளையாக செயல் பட்டவன் கொடுங்கசாமி தான் என்பதும் தெரிய வந்தது,
மேலும் இவன் மீது தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் இவர்களின் நண்பர்களான கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த மோகன் மகன் மோகன் குமார் 39.மீது சுமார் பத்து வழக்குகளும் திருச்சி துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியை சேர்ந்த வேலு மகன் பூனை நாகராஜன் 49. மீது சுமார் பத்து வழக்குகளும் உள்ளன என்பதும் இந்த நால்வரும் சேர்ந்து தான் இக்கொள்ளை சம்பவங்களில் ஈடு பட்டு வந்துள்ளதும்,
சில மாதங்களாக தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் பூட்டி இருந்த 15- வீடுகளில் இக் கும்பல் கொள்ளை அடித்துள்ளதும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இத் தகவல் அறிந்ததும் தப்பி ஓடிய கொடுங்கசாமி மற்றும் அவனது நண்பன் மோகன் ஆகிய இருவரும் கர்நாடகா மாநிலம் மைசூர் அருகில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் தஞ்சை தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது உடனே அந்த இடத்தை சுற்றி வளைத்து மறைந்திருந்த குற்றவாளிகளை பிடித்தார்கள் மேலும் திருச்சியில் பதுங்கி இருந்த மற்றொரு குற்றவாளியான பூனை நாகராஜூவையும் அதிரடியாக கைது செய்து தஞ்சைக்கு அழைத்து வந்தார்கள்
மேலும் அவர்கள் வைத்திருந்த அதில் சுமார் 50 – சவரன் பவுன் நகைகளும், 1 கிலோ வெள்ளி பொருள்களும், ஐந்து லட்சம் ரொக்கமும் கைப்பற்றி குற்றவாளிகள் நான்கு நபர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்