திருச்சி : திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல கடையை திறக்க வந்த பணியாளர்கள் கடையின் பின்பக்க சுவரில் பெரிய ஓட்டை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருச்சி கோட்டை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைக்க காவல்துறையினர் விரைந்து வந்தனர்.
காவல்துறையினர் முதல் கட்ட விசாரணையில், மூன்று அடுக்குமாடி கொண்ட கட்டடத்தில் லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையின் கீழ் தளம் மற்றும் மேல் தளத்தில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அந்த மைதானத்தின் வழியாகப் பக்கவாட்டு சுவரில் கொள்ளையர்கள் நேற்றிரவு நகைக் கடையின் சுவரைத் துளையிட்டு உள்ளே சென்றுஇ பாதுகாப்பாக வைத்திருந்த கோடிக்கணக்கான மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறை வல்லுநர்களை வரவழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்க்கு வந்த மத்திய மண்டல ஐஜி திரு.வரதராஜ், திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் மற்றும் துணை ஆணையர்கள் திரு.மயில்வாகனன், நிஷா, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியா உல்ஹக் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூறினார்.