தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேட்மாநகரம் பரும்பு பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் நிறுத்தியிருந்த அந்நிறுவனத்திற்கு சொந்தமான ஜெனரேட்டர் நேற்று 18.01.2023 காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து மேற்படி தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் கந்தசாமி 35. என்பவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீ;வைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஏரல் வடகரை தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் கார்த்திக் 33. முத்தையாபுரம் பேரின்ப நகரைச் சேர்ந்த கந்தசாமி மகன் குமார் 43. மற்றும் முத்தையாபுரம், அய்யன்கோவில் தெருவைச் சேர்ந்த அமிர்தராஜ் மகன் சகாய பூண்டி செல்வம் 29. ஆகிய 3 பேரும் மேற்படி தனியார் நிறுவன வளாகத்தில் நிறுத்தியிருந்த ஜெனரேட்டரை சரக்கு வாகனத்தில் திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அன்னராஜ் மேற்படி குற்றவாளிகளான கார்த்திக், குமார் மற்றும் சகாய பூண்டி செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள ஜெனரேட்டர் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி கார்த்திக் மீது ஏற்கனவே முத்தையாபுரம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.