தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிக கவனம் செலுத்தி மாவட்டம் முழுவதும் பல்வேறு தனிப்படைகள் அமைத்து தீவிரப்படுத்தியுள்ளார்.
இதன் விளைவாக கடந்த இரண்டு மாதங்களில் ஆங்காங்கே கஞ்சா, ‘சாரஸ்” மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும், அதற்குப் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தும், பல குற்றவாளிகள் கைது செய்தும், பலர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்களின் மேற்பார்வையில், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள் அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. ரவிக்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் இன்று (09.09.2020) தூத்துக்குடி எட்டயாபுரம் ரோடு சுசி பெட்ரோல் பங்க் அருகில் சந்தேகப்படும்படியாக இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து, தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி ஐயப்பன் நகரைச் சோந்த சுப்பையா மகன் விஸ்வநாதன் (48) என்பதும், வTN52P 7258 பதிவு எண் கொண்ட லாரியில் வெளி மாநிலத்திற்கு லோடு ஏற்ற சென்றபோது ஒடிசா மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபரிடம் கஞ்சா வாங்கி வந்ததாகவும், அதை தனது கூட்டாளியான தூத்துக்குடியில் உள்ள சரவணன் என்பவரிடம் மொத்தமாக விற்பனை செய்வதாகவும், அதை சரவணன் சில்லறை பொட்டலங்களாக போட்டு விற்பனை செய்வதாகவும் தெரியவந்தது. உடனே தனிப்படையினர் மேற்படி விசுவநாதனை கைது செய்து, அவரிடமிருந்த 2 கிலோ 400 கிராம் கஞ்சாவையும், அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேற்படி அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு இதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கைது செய்து, கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.