விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனை அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், ரெட்டியபட்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் தலைமையில், பேருந்து நிலையம் அருகேயுள்ள பகுதிகள், பெட்ரோல் பங்க் தெரு, அரசு மருத்துவமனை பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனை செய்தது தெரிந்தது. மேலும் உணவகம் ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள அஜினமோட்டா பயன்படுத்துவது தெரிந்தது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 8 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சுமார் 12 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், 2 கிலோ அஜினமோட்டா உள்ளிட்டவைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திடீர் சோதனையின் போது சுகாதார ஆய்வாளர்கள் சூரியா, கணேஷ் மற்றும் நரேன் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி