வேலூர் : வேலூர் அருகே உள்ள அரியூரில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு வெளிநாட்டினர் சட்ட விரோதமாக தங்குவதாக அரியூர் காவல்துறையினருக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் காவல்ஆய்வாளர் திரு. செந்தில்குமார், தலைமையிலான காவல்துறையினர், நேற்று திடீரென அரியூர் பகுதிகளில், உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை செய்தனர். அப்போது விடுதிகளில் சந்தேகப்படும் வகையில் மர்மநபர்கள் தங்கி உள்ளார்களா?, வெளிநாட்டினர் சட்ட விரோதமாக தங்கி உள்ளார்களா?, விசா தேதி முடிந்தும் தங்களது சொந்த நாடுகளுக்கு செல்லாமல் யாராவது தங்கி உள்ளார்களா? என ஒவ்வொரு அறையாக சோதனை செய்யப்பட்டது. மேலும் விடுதியில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் காவல்துறையினர், சோதனை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, தகவல் தெரிவிக்க வேண்டும் அரியூர் பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட விடுதிகளில், சோதனை நடத்தப்பட்டது. அப்போது விடுதிகளில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களை சோதனை செய்தோம். தங்கி உள்ளவர்கள் விவரம், அவர்களின் ஆதார் எண் வாங்கப்பட்டுள்ளதா?, புகைப்படம் பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம். கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தவும், விடுதிகளுக்கு சந்தேகப்படும் படியாக வரும் நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறையில், புகார் செய்ய வேண்டும் என்றும் விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அடைக்கலமோ, ஆதரவோ கொடுப்பது குறித்து தெரியவந்தால், விடுதியின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று திடீர் சோதனை அவ்வப்போது மேற்கொள்ளப்படும்.