விழுப்புரம்: தாம்பரம் லட்சுமிபுரத்தில் வசிக்கும் பிரசாந்த் (30). என்பவர், திருவண்ணாமலையில் நடைபெற்ற உறவினர் சுபகாரியங்களுக்கு சென்று வீடு திரும்பும் வழியில் திண்டிவனம் அருகே உள்ள ‘அம்மா டீக்கடை’யில் ஓய்வு எடுத்தார். அப்போது தனது காரை நிறுத்தி டீ அருந்திச் சென்று கொண்டிருந்தபோது, கையில் வைத்திருந்த கைப்பையை டீக்கடையிலேயே மறந்து விட்டார். அந்தப் பையில் 18 சவரன் தங்க நகை மற்றும் லேப்டாப் இருந்ததாக அவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து நெடுஞ்சாலை ரோந்து எண்–1ல் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. மாணிக்கவாசகர் மற்றும் தலைமை காவலர் திரு. வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சோதனைக்குப் பிறகு, பிரசாந்த் விட்டு சென்ற இடத்திலேயே பை இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக உரிமையாளருக்கு தகவல் வழங்கி அவரை அழைத்தனர். பின்னர் ரோசனை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. தரனேஸ்வரி அவர்களின் முன்னிலையில் பையும் அதிலிருந்த நகைகளும் லேப்டாப்பும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. தவறவிட்ட 18 சவரன் நகையும் லேப்டாப்பையும் அப்படியே மீட்டு வழங்கிய போலீசாருக்கு பிரசாந்த் தம்பதி நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர். 18 சவரன் நகையுடன் தவறவிட்ட தனது பை உடனடியாக கிடைக்கப்பெற்று ஒப்படைக்கப்பட்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
















