கோவை: கோவை ரெட் பீல்டில் இந்திய கடற்படை தளமான ஐ.என்.எஸ் அக்ரானி உள்ளது. காஷ்மீர் விமானப் படைத்தளத்தில் தாக்குதல் நடந்ததை அடுத்து இந்த கடற்படை தளத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த தளத்தை சுற்றி 3கிலோ மீட்டர் தூரத்திற்கு டிரோன் கேமரா பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அந்த காமிராவை பறக்க விட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கடுப்படும்:
டிரோன் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவையில் உள்ள இந்திய கடற்படை தளமான ஐ.என்.எஸ் அக்ரானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்முவில் விமானப்படைத் தளம் மீது டிரோன் விமானம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதன் காரணமாக கோவை ரெட் பீல்டில் உள்ள ஐ.என்.எஸ் அக்ரானிகடற்படை தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கடற்படை வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை ரெட் பீல்டு ஐஎன்எஸ் அக்ரானி பகுதியில் இருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு டிரோன் கேமிரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி பறக்க விட்டால் டிரோன் காமிரா உடனடியாக சுட்டு வீழ்த்தப்படும். மேலும் அதனை பறக்கவிட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 121 இந்திய அரசு மீது போர் முயற்சி 121 ஏ தண்டனைக்குரிய குற்றங்களே செய்ய சதி 287 இயந்திரங்களை தவறாக பயன்படுத்துதல் 336 தனி பாதுகாப்புக்கு எதிராக நடந்து கொள்ளுதல் 337 மக்கள் உயிர் பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால் இந்திய விமான போக்குவரத்து கழக இயக்குனரிடம் உரியஅனுமதி பெற்று தான் பறக்கவிடவேண்டும், ஒரு வாரத்துக்கு முன்பு உரிய அனுமதி பெற வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.