கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சேகவுண்டன்புதூர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வடக்கிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் விஜயன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம், போலீஸ்காரர் பிரபு ஆகியோர் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியில் உள்ள கிராம சேவை கட்டிடத்தின் பின்புறம் முட்புதரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அப்போது போலீசார் வருவதை பார்த்ததும் மதுபாட்டில்கள் வாங்க வந்தவர்கள் தலைக்தெறிக்க ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பிடிப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து ( 46) என்பதும், டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அதிக விலைக்கு மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு காளிமுத்துவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 359 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான காளிமுத்துவை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.