விழுப்புரம் : புதுச்சேரி மாநிலத்தில், இருந்து விக்கிரவாண்டி பகுதி வழியாக காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. ஸ்ரீநாதாவுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.கீதா, மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.இனயத்பாஷா, ஏட்டுகள் திரு.சிவனேசன், திரு.யுவராஜ், திரு.இளந்திரையன், திரு.மகாமார்க்ஸ் ஆகியோர் இளையாண்டிப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒன்றன்பின் ஒன்றாக 2 சொகுசு கார்கள் வேகமாக வந்து கொண்டிருந்தது. உடனே அந்த கார்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். அந்த சமயத்தில் பின்னால் வந்த காரில் வந்தவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். அதற்கு முன்பாக வந்த காரில் இருந்த 2 பேரும் சிக்கினர்.
பின்னர் அந்த 2 கார்களையும் போலீசார் சோதனை செய்தபோது பின்னால் வந்த காரில் 20 அட்டைப்பெட்டிகளில் 480 விலை உயர்ந்த மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த மணி மகன் மணிகண்டன் (32), வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் தினேஷ்(29) என்பதும், தப்பி ஓடியவர் நெல்லித்தோப்பை சேர்ந்த செல்வராஜ் என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், பிடிபட்ட மணிகண்டன், தினேஷ் ஆகிய இருவரும், மதுபாட்டில்களை கடத்திச்சென்று அதற்கான கூலித்தொகையை பெறுபவர்கள் ஆவர். இவர்கள் இருவரின் மீதும் ஏற்கனவே மதுபாட்டில்கள் கடத்திச்சென்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து மணிகண்டன், தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 2 பேரையும் போலீசார், விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய செல்வராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.