கோவை: சமீப காலமாக ஓ.எல்.எக்ஸ் (OLX) மூலம் பொருட்களை வாங்குவோரை நூதன முறையில் ஒரு மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது. இந்த கும்பல் தங்களை இராணுவ வீரர் போல் போலியாக அடையாளபடுத்தி தாங்கள் பணி மாறுதலில் செல்ல இருப்பதாகவும் அதனால் தங்களது கார், பைக், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒரு பொருளை விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்து அதற்கான விலையை மக்களை கவரும் வகையில் மிகவும் குறைவாகவும் பொருட்களின் புகைப்படங்களை அழகாகவும் பதிவிட்டு ஓஎல்எக்ஸ் தளத்தில் விளம்பரம் பதிவிடுகிறார்கள்.
இவர்களது விளம்பரங்களால் கவரப்பட்டு இந்த மோசடி நபர்களின் தொலைபேசி எண்களை பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களிடம் அவர்களது வாட்ஸ் ஆப் எண்களுக்கு அவர்களை நம்பவைப்பதற்க இராணுவ உடையில் இருக்கும் நபர்களின் புகைப்படங்களையும் இராணுவ வீரர்களின் அடையாள அட்டைகளையும் அனுப்புகிறார்கள். சிலருக்கு இராணுவ உடையிலேயே வீடியோ கால் பேசியும் ஏமாற்றுகிறார்கள்.
அவர்களை நம்பி முன்தொகை செலுத்தும் நபர்களிடம் பணத்தை வங்கி கணக்குகள் மூலம் பெற்றுக் கொண்டு மொபைல் எண்களை ஸ்விட்ச் ஆப் செய்துவிடுகிறார்கள்.ஓஎல்எக்ஸ் விளம்பரத்தை நீக்கி விடுகிறார்கள்.
எனவே ஓஎல்எக்ஸ் மூலம் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் இது போன்ற போலியான நபர்களிடம் ஏமாந்துவிடாமலும் முடிந்தவரையில் தாங்களே நேரடியாகவோ அல்லது தங்களது உறவினர்கள் நண்பர்கள் மூலமாகவோ பொருட்களை நேரடியாக பார்த்தும், பொருட்களை விற்பனை செய்யும் நபரின் நம்பகத்தன்மை பற்றி நன்கு விசாரித்தும் வாங்குமாறும் இது போல வாங்குவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.