சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் மங்கல், (வ/25), என்பவர் கடந்த 13.06.2021 அன்று இரவு கல்லூரி சாலை, சுபாராவ் ரோடு சந்திப்பு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது,
அங்கு அடையாளம் தெரியாத 3 நபர்கள் சஞ்சயிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து சஞ்சய் F3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
F3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட பரத்குமார், (வ/19) பழைய வண்ணாரப்பேட்டை என்பவரை கைது செய்தனர்.
மேலும் செல்போன் பறிப்பு சம்பவத்தில் உடன் இணைந்து ஈடுபட்ட இளஞ்சிறார்கள் இருவரையும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 4 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ½ அடி நீளமுள்ள 1 கத்தி கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் குற்றவாளி பரத்குமார் மற்றும் இரண்டு இளஞ்சிறார்கள் சேர்ந்து 13.06.2021 அன்று தொடர்ச்சியாக, நுங்கம்பாக்கம், தாஜ் ஹோட்டல் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த பவித்திரன், (வ/24) அண்ணாநகர் என்பவரிடமும், குளக்கரை சாலை, கேரளா சிப்ஸ் கடை அருகில் நடந்த சென்று கொண்டிருந்த தருண்பிரதாப், (வ/26) நுங்கம்பாக்கம் என்பவரிடமும் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளது தெரியவந்தது.
மேலும் குற்றவாளி பரத்குமார் என்பவர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு இளஞ்சிறார்கள் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.