கோவை: கோவை சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் கடந்த வாரத்தில் மட்டும் 5 புகார்கள் பெறப்பட்டது. இதையடுத்து கோவை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சுகுமார் தனிப்படை அமைத்து செல்போன் குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். இதன்படி இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரமூர்த்தி, நாகராஜன் உட்பட தனிப்படையினர் செல்போன் பறிப்பு குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தினர்.
இது குறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது குறிப்பிட்ட அடையாளத்துடன் இருந்த வாலிபர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து தீவிரமாக நடத்திய விசாரணையில் கே கே புதூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் மதன் என்கிற மெண்டல் மதன் (22 )என்ற வாலிபரை போலீசார் சுற்றி வளைத்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் திருடும் செல்போன்களை என். எச. ரோடு மானிய தோட்டம் பகுதியில் வசிக்கும் முகமது என்ற அஷ்ரப் அலியிடும் விற்று விடுவதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து சின்னவேடம்பட்டி பகுதியில் கறி கடை நடத்தி வரும் அசரப் அலியை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.
அவர் இதேபோல பல்வேறு பகுதிகளில் செல்போன் திருடிக் கொண்டு வரும் வாலிபர்களிடம் இருந்து செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கி வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதன் என்கிற மெண்டல் மதன் மற்றும் அஷ்ரப் அலி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.