திருநெல்வேலி :சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவருமான இமானுவேல் சேகரனின் நினைவு தினம் வருகிற 11.09.2020 அன்று அனுசரிக்கப்படுகின்றது.செப்டம்பர் 11, 1957ல் யாரும் எதிர்பார்த்திராத அதிர்ச்சி நடந்தது. ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கான தொடர்ந்து போராடி வந்த இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக பெரும் சாதிக் கலவரம் மூண்டது. பின்னர் பல்வேறு கைது நடவடிக்கைகளை அடுத்து, கலவரம் ஒடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் போராளியாக விளங்கிய இமானுவேல் சேகரன், இன்றளவும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன், IPS அவர்களின் அறிவிப்பு. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும், கு.வி.மு.ச 144 கீழ் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், பொதுமக்கள் நலன் கருதி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் தொடர்பாக வெளிமாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் செல்வதற்கு இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகையால் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் எவரும் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.