சென்னை: சென்னையில் 20 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான போலீசார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். குறுகலான தெருக்களில் போலீசார் சைக்கிளில் மெதுவாக செல்வதால் அங்கிருக்கும் சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் போலீசார் செல்வதை பார்த்து பயப்படுவது உண்டு.
ஆனால் தற்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வதால் போலீசார் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை. இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதை தவிர்க்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரு.சங்கர் ஜிவால், இரவு நேரங்களில் போலீசார் சைக்கிளில் ரோந்து செல்லும்படி அறிவுறுத்தினார். அதன்படி சென்னையில் உள்ள 12 துணை கமிஷனர்கள் முன்னிலையில் போலீசார் சைக்கிளில் ரோந்து செல்லும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக திருமங்கலம் உதவி கமிஷனர் திரு.ரவிச்சந்திரன் தலைமையில் நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், திருமங்கலம் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெ.ஜெ.நகர் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் நகர் வழியாக திருமங்கலம் வரை வீதி வீதியாக சைக்கிள்களில் ரோந்து சென்றனர். இதனால் போலீசாருக்கு உடற்பயிற்சி செய்தது போல் இருப்பதுடன், காற்று மாசு ஏற்படுவதை தவிர்க்க முடிவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை