சென்னை : சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்களை தடுப்பது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில், (18.3.2020) அன்று காவல் ஆணையரகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. காவல் ஆணையாளர், காவல் அதிகாரிகள், சென்னை காவல் மருத்துவமனையின் டீன் திருமதி.சித்ரா, மருத்துவர் திருமதி.சுதா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு, கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும், கொரோனா பாதிக்காமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.எச்.எம்.ஜெயராம்,இ.கா.ப., இணை ஆணையாளர் (தலைமையிடம்) திரு.ஏ.ஜி.பாபு,இ.கா.ப., துணை ஆணையாளர் (நிர்வாகம்) திரு.எஸ்.ஆர்.செந்தில்குமார், காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் சென்னை காவல் மருத்துவமனை குழுவினர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, (18.3.2020) அன்று மாலை சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்தில் சென்னை பெருநகர காவல் சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப, அவர்கள் தலைமை தாங்கி கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் காத்திட வேண்டி பல்வேறு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகாமல் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை காவல் ஆணையாளர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் முனைவர் ஆர்.தினகரன்,இ.கா.ப., மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.பி.விஜயகுமாரி,இ.கா.ப, அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் திரு.எஸ்.எம்.முத்துசாமி,இ.கா.ப., காவல் அதிகாரிகள், மருத்துவ குழுவினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை