சென்னை : சென்னை சின்மயா நகர் நெற்குன்றம் சாலையில், காலையில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அருகே உள்ள கால்வாயில் கருப்பு கலர் பிளாஸ்டிக் கவரில் உடல் ஒன்று சடலமாக இருப்பதை கண்டறிந்து காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதை அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற விருகம்பாக்கம் காவல் துறையினர் பாலத்தின் கவரை மீட்டு பிரித்துப் பார்த்தபோது அதில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் துணி வாயில் அடைக்கப்பட்ட நிலையிலும், ஆண் சடலம் ஒன்று முழுவதும் இரத்த வெள்ளத்தில் இருந்தது.
இதை அடுத்து காவல்துறையினர், சடலத்தை மீட்டு பரிசோதனை செய்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட சோதனையில், கொலை செய்யப்பட்ட நபர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன் (67), என்றும் இவர் வைப்ரேஷன் இன்ஜினியரிங் கன்சல்டிங் சர்வீஸ் கம்பெனியில் உரிமையாளர், எனவும் தெரிய வந்தது. இந்த நிறுவனமானது கட்டிடத்தை உறுதித் தன்மையோடு கட்டி தருவதற்கு பிளான் போட்டுக் கொடுக்கும் கட்டுமான நிறுவனம் ஆகும். இந்த சம்பவம் குறித்து தி.நகர் துணை ஆணையர் திரு.ஆதர்ஷ் பச்சேரா ஐ.பி.எஸ், நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்துள்ளதா? அல்லது பணம் பறிக்கும் நோக்கில் மர்ம நபர் கடத்திக் கொலை செய்து சடலத்தை கால்வாயில் போட்டுவிட்டு சென்றனரா? என பல கோணத்தில் விருகம்பாக்கம் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.