வாலிபரை வெட்டிய இருவர் கைது:
வியாசர்பாடி மெகிசின்புரத்தை சேர்ந்த ராஜேஷை (20) தீபாவளி பண்டிகையின்போது கத்தியால் வெட்டிய கன்னிகாபுரத்தை சேர்ந்த விக்கி (24), தமிழரசன் (32) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி அண்ணா தெருவை சேர்ந்த ஆகாஷை (25), உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிய எஸ்.ஏ.காலனியை சேர்ந்த ராகேஷ் (22), கிருபாகரன் (25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி முல்லை காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்த பிரகாஷை (32), இரும்பு ராடால் தாக்கி, தங்க மோதிரத்தை பறித்து சென்ற வியாசர்பாடியை சேர்ந்த சரத்குமார் (21), பூவரசன் (21) மற்றும் செங்குன்றத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
புளியந்தோப்பு அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்த அருணை (20), பணம் கேட்டு தாக்கிய கன்னிகாபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (26), அம்பேத்குமார் (24), ராமச்சந்திரன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
2 வீடுகளில் திருட்டு:
கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 131வது தெருவை சேர்ந்த ஜமரூத் பானு (50) வீட்டில் நுழைந்து 2 சவரன் நகை மற்றும் 2 ஆயிரத்தையும், கொடுங்கையூர் விவேகானந்தா நகர் ராதாகிருஷ்ணன் தெருவில் வசிக்கும் மணிகண்டன் (30) வீட்டின் பூட்டை உடைத்து 5 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
9 சவரன் மாயம்:
ஓட்டேரி வெங்கடம்மாள் சன்னதி தெருவை சேர்ந்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் கருணாகரன் வீட்டில் 9 சவரன் நகை நேற்று மாயமானது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆசிரியர் வீட்டில் ரகளை:
பெரவள்ளூர் சோமையா ராஜா தெருவை சேர்ந்த ஆசிரியர் பால் டேவிட் ராஜன் (45) வீட்டின் மீது கற்களை வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தசந்தோஷ்குமார் (29), கிரிஷ்குமார் (25), தரண் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் ரவுடி சரண்:
கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 40 வழக்குகளில் தொடர்புடைய வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்த ரவுடி அம்பேத்கர் (35), தலைமறைவாக இருந்ததால் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார்.
22 லட்சம் தங்கம் பறிமுதல்:
துபாயிலிருந்து நேற்று சென்னை வந்த மீட்பு விமானத்தில் ₹22 லட்சம் மதிப்புள்ள 420 கிராம் தங்கக்கட்டி மற்றும் தங்க பேஸ்ட்களை கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சையது அப்தகீர் (34), ராஜாமுகமது ஆகியோரை சுங்கத்துறையினர் கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
தொழிலாளியிடம் வழிப்பறி:
சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோயில் ஏரிக்கரை தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி சின்னத்துரையை (24), மறித்து ஒரு சவரன் செயின், செல்போனை பறித்து சென்ற செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த சூரியா (19), அஜித்குமார் (23), சஞ்சய் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.