விழுப்புரம் : விழுப்புரம் செஞ்சி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 6-ந்தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பார்வையிடுவதற்காக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை சென்னையில் இருந்து கார் மூலம் திருவண்ணாமலைக்கு புறப்பட்டார். அப்போது செல்லும் வழியில் செஞ்சி போலீஸ் நிலையத்திற்கு அவர் திடீரென சென்றார். தொடர்ந்து அவர் போலீஸ் நிலையத்தில் வருகை பதிவேடு, குற்ற பதிவுகள், முதல் அறிக்கை பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? புகார் அளிக்க வரும் மக்களுக்கு போதிய இருக்கைகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார். பின்னர் போலீசாரிடம் நிறைகுறைகளை கேட்டறிந்தார். வெகுமதி தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்ட டி.ஜி.பி., கேமரா பதிவு செய்யும் பெட்டியை திறந்து பார்த்தார். அதில் கடந்த 4 நாட்களாக பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் செஞ்சி சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் பாலாஜி சுரேஷ் தலைமையில் செஞ்சி வா்த்தகர்கள், போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்தித்து மனு அளித்தனர். அதில் கடந்த 2 ஆண்டுகளாக செஞ்சி நகரில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் திருடு போயுள்ளது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே குற்றச்செயல்கள் நடக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபு, வியாபாரிகள் தங்களது கடைகளில் கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும், குற்றச்செயல்கள் ஏதாவது நடந்தால், கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.ஸ்ரீநாதா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரியதர்ஷினி, தேவராஜ், இன்ஸ்பெக்டர் தங்கம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்க திரு.குருநாதன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.