கோவை : 5-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதிகள், பஸ்நிலையங்கள், வணிக வளாகங்களில்காவல்துறையினர், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு திடீரென்று மாநகர காவல்துறையினர், காந்திபுரம் பஸ் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலை கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். குறிப்பாக ரெயிலில் கொண்டு செல்லப்படும் பார்சல்கள், சரக்குகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல் ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் பயணிகளின் உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் ரெயிலில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ரெயில்வே காவல்துறையினர், அங்குள்ள பிளாட்பார்ம், பயணிகள் தங்குமிடம், ஓய்வறை, கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
கோவை வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் சமீரன் வருகிற 15-ந் தேதி தேசிய கொடி ஏற்றுகிறார். மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ரெயில் நிலையம், விமான நிலையம், கடைவீதிகள் உள்பட மக்கள் கூடும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கோவை மாநகரில் 1,500 போலீசாரும், ஊரக பகுதியில் ஆயிரம் காவல்துறையினர், என மொத்தம் 2,500 காவல்துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் வாகன சோதனைகளும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.
