திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ஜோதி என்பவர் நடத்தி வந்த தீபாவளி நகை பண்டு திட்டத்தில் தாமரைப்பாக்கம், திருநின்றவூர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, வெள்ளியூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சேர்ந்தனர். ஜோதிக்கு உடந்தையாக அவரது மனைவி சரண்யா, சகோதரர் பிரபு, தந்தை மதுரை மற்றும் கடை மேலாளர்களாக நாகலட்சுமி, சரண்ராஜ், வேணுகோபால், சத்தியமூர்த்தி, சத்தியமூர்த்தியின் மனைவி ஆகியோர் இருந்து வந்தனர். இந்த நிலையில் மாதந்தோறும் அனைவரும் தவணை பணத்தை முறையாக செலுத்தி வந்த நிலையில், வாடிக்கையாளர்களை ஏமாற்றிவிட்டு ஜோதி உள்பட அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.
இவ்வாறாக மொத்தமாக சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.10 கோடிக்கும் மேலாக மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண், உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளர்களான சரண்ராஜ் (வயது 29), வேணுகோபால் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள உரிமையாளர் ஜோதி உட்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.