விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்று காலை ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளத்தில் நேற்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் இன்று சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், இன்று 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேன்சி ரக பட்டாசுக்கு பயன்படுத்தும் ரசாயன மூலப் பொருட்கள் உலர வைக்கப்பட்டிருந்த அறை பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் அந்த அறை முற்றிலும் இடிந்து தரை மட்டமானது. இடிபாடுகளில் சிக்கி சுரேஷ் (32) என்ற தொழிலாளி படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் சுரேஷை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி பாலமுருகன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக பெரிய அசாம்பாவிதம் நடைபெறாமல் தொழிலாளர்கள் தப்பினர். சம்பவ இடத்தை சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி