சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் திரு.மதுசூதன ரெட்டியின் பாதுகாவலராக (கன்மேன்) பணியாற்றி வந்தவர் திரு.முகமது மீரா பஷித்.23. இவர் தேவகோட்டை அருகிலுள்ள முகமதியாபட்டினத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரில் உள்ள தாயாரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார்.
சென்னை ராமேஸ்வரம் பைபாஸில் முள்ளிக்குண்டு பகுதியின் வழியாக வரும்போது இவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
உயிருக்கு போராடிய அவரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை மரணம் அடைந்தார். இவரது மரண செய்தி கேள்விப்பட்டதும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் திரு.மதுசூதன ரெட்டி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ். மாங்குடி உள்ளிட்ட பலரும் அவரது சொந்த ஊருக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் காவல்துறை அணிவகுப்பு நடத்தப்பட்டு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் திரு.மதுசூதன ரெட்டி சென்ற வாகனம் காளையார்கோவில் பகுதியில் விபத்துக்குள்ளானது.
அப்போது கார் கண்ணாடியை உடைத்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களை மீட்டவர் திரு.முகமது மீரா பஷீத் என்பது குறிப்பிடத்தக்கது.