கோவை : சிறுவன் இயக்கிய வாகனம் விபத்தில் சிக்கியதையடுத்து, விதிகளை மீறி சிறுவனிடம் வாகனத்தைக் கொடுத்த அவரது தாயாரை ஒரு நாள் முழுவதும் நீதிமன்றத்தில் இருக்குமாறு தண்டனை வழங்கி கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதியன்று 16 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவா்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது அவ்வழியே சென்ற அரசுப் பேருந்தை வளைவு ஒன்றில் முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த சிறுவன் மீது பேருந்து ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இதில் விதிகளை மீறி சிறுவனிடம் வாகனத்தைக் கொடுத்து அனுப்பிய இன்கம்டாக்ஸ் காலனியைச் சோ்ந்த அவரது தாயாா் சுமித்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா்.
இந்த வழக்கு கோவை மாவட்ட நீதித் துறை நடுவா் மன்றத்தில் (எண்.8) விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில், சிறுவனிடம் இருசக்கர வாகனத்தைக் கொடுத்த காரணத்தால் அவரது தாயாருக்கு ரூ. 32 ஆயிரம் அபராதமும், நீதிமன்ற நேரம் முடியும் வரை ஒரு நாள் முழுவதும் நீதிமன்றத்தில் இருக்குமாறும் தண்டனை விதித்து நீதித் துறை நடுவா் எம்.ராமதாஸ் நேற்று தீா்ப்பளித்தாா்.
நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்