கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் கீழக்கொல்லையை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகன் அஸ்வின் 4. இவனை நேற்று மாலை 3 மணி முதல் காணவில்லை. அவனை பெற்றோர், உறவினர் கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவன் கிடைக்காததால் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ராஜா தாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார்
விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் அந்த சிறுவனை அழைத்துச்சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்துபோலீசார் மற்றும் ஊர் மக்கள் கிராம முழுவதும் தேடினர். சிறுவன் எங்கும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.சபியுல்லா சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைதொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இரவு முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இன்று காலை அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில்
பலத்த காயத்துடன் அடித்துக் கொலைசெய்யப்பட்டு சிறுவன் கிடந்தான்.
அவனது உடலை போலீசார் கண்டெடுத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.