தூத்துக்குடி : புளியங்குளத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் சரவணன் என்ற சரவணக்குமார் (வயது 27), முருகேசன் மகன் வேல்ச்சாமி (வயது 29), கன்னியப்பன் மகன் உதயகுமார் (வயது 19) வேல்ராஜ் மகன் கருப்பசாமி (வயது 19) மற்றும் இளஞ்சிறார் ஆகியோர் விளாத்திக்குளம் தாலுகா, குளத்தூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில் உள்ள ஒரு 17 வயது சிறுமியின் செல்போனுக்கு, தங்கள் செல்போனிலிருந்து அடிக்கடி பேசி பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கின்றனர், அதனால் அந்த சிறுமி தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்திருக்கிறார்.
அதனால் கடந்த 08.05.2020 அன்று இரவு சுமார் 7.00 மணயிளவில் மேற்படி 5 பேரும் சிறுமி வீட்டருகே சென்று, அங்கிருந்த மேற்படி சிறுமியை பார்த்து, ஏன் செல்போனை ஆஃப் செய்தாய், அதை ஆன் பண்ணு, நாளை காலை நாங்கள் கூப்பிட்ட இடத்திற்கு வரவேண்டும், இல்லையென்றால் உன்னையும், உன் குடும்பத்தையும் தீ வைத்து கொளுத்தி, எரித்து விடுவோம் என்று திரும்ப, திரும்ப கொலை மிரட்டல் விடுத்ததால் அந்த சிறுமி மன வேதனைப்பட்டு 09.05.2020 அன்று தானாக உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சையில் இருந்து வருகிறார். இது குறித்து மேற்படி சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு. குமார் அவர்கள் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று (15.06.2020) மேற்படி வழக்கின் எதிரிகள் இளஞ்சிறார் உட்பட 5 பேரை தனிப்படையினர்; 48 மணி நேரத்தில் கைது செய்தனர். கைது செய்த மேற்படி 5 பேரில் சரவணன் என்ற சரவணக்குமார், வேல்ச்சாமி, கருப்பசாமி மற்றும் உதயகுமார் ஆகிய 4 பேரை குளத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. இராமலெட்சுமி அவர்கள் விளாத்திக்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தார். இளஞ்சிறாரை தூத்துக்குடி சிறுவர் குழுமம் முன்பு ஆஜர்படுத்தி திருநெல்வேலி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தார். இதில் குறைபாடுகள் இருக்கின்றதா என்பதை கண்டறிய காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அவர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதுபோன்ற பாதிப்புகளுக்குள்ளாகும் பெண்கள் விபரீத முடிவு எடுப்பதை தவிர்க்கவும், பெண்கள் பாதுகாப்புக்கென இலவச தொலை பேசி எண் 1091, தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் அவசர உதவிக்கென அமைக்கப்பட்டுள்ள அலை பேசி எண். 9514 144 100 மற்றும் காவல்துறையின் அவசர உதவி தொலை பேசி எண். 100 ஆகியவற்றிற்கோ அல்லது உங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கோ புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இருந்த இடத்தில் இருந்து கொண்டோ அல்லது வீட்டில் இருந்து கொண்டோ புகார் அளிக்கலாம். நேரில் வரவேண்டிய அவசியமில்லை. மேலும் புகார் அளிப்பவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி