கோவை : திருப்பூர் மாவட்டம் அவினாசி பொத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த சத்யமூர்த்தி (25). இவர் தனது ஃபேஸ்புக்கில் சிறார்களின் ஆபாச வீடியோ பதிவிட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து சமூக ஊடகப் பிரிவிலிருந்து புகார் அளிக்கப்பட்டதன் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யமூர்த்தியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சத்யமூர்த்தி, தனியார் கல்லூரியில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். முன்னதாக, இதே புகாரில் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ரெண்டா பாசுமடாரி என்பவரை பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களின் சமூக வலைத்தள கணக்கை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.
மேலும் இவ்வாறான குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருப்போர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் மேற்படி நபர்களும் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் ஐபிஎஸ் அவர்கள் எச்சரித்துள்ளார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்