இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் நீதிமன்ற காவலர்கள் மற்றும் CCTNS காவலர்களுக்கான சிறப்பு குற்ற கலந்தாய்வு கூட்டம், (18.05.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில், உள்ள கூட்டரங்கில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புலன் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து, குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ள வழக்குகளில் உடன் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து குற்ற பத்திரிக்கைகளை விரைந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அறிவுரைகள் வழங்கினார்கள். நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை உடனுக்குடன் ஆஜர்படுத்தியும், NBW நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளை உடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்கள்.
உட்கோட்ட காவல் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள நடப்பு தாள்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு உடன் பதில் அனுப்ப அறிவுறுத்தினார்கள். கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் குற்றவாளிகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து தக்க அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சரவணன் (தலைமையிடம்), திரு.குணசேகரன் (CWC) திரு.குமார் (CCW), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.பிரபு (இராணிப்பேட்டை உட்கோட்டம்), திரு. வெங்கடேசன் (அரக்கோணம் உட்கோட்டம்), திரு.வெங்கட கிருஷ்ணன் (CWC), செல்வி. சந்திரலேகா (பயிற்சி) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.