காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம் பகுதியில் தனது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த செந்தில்குமார் என்பவரை மர்ம நபர்கள் இருவர் வழி கேட்பது போல் நடித்து அவரை தாக்கி அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தாழம்பூர் காவல் நிலைய போலீசார் குற்றவாளிகளை குறித்த அடையாளங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டு, அப்பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
குற்றவாளிகள் இருவரும் அந்த பகுதியில் இருந்த ஒரு டீ கடையில் இருந்து காவலர்களைக் கண்டதும் தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றனர். வாகனத்தை விரட்டி பிடிக்க முயன்றபோது பிடிக்க வந்த காவலர்களையும் கத்தியால் வெட்ட முயன்றனர். இதனை அடுத்து காவலர்கள் சாமர்த்தியமாக அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் குமணன்சாவடி சேர்ந்த சேட்டு (24), சந்தோஷ் (24)என்பதும் மேலும் அவர்கள் வண்டலூர் பகுதியிலும் இதேபோல் பைக்கில் வந்தவரிடம் வழிப்பறி செய்து விட்டு வந்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து மூன்று செல்போன்களையும் ஒரு கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்து தாழம்பூர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் சிறப்பாக பணியாற்றி வழிப்பறி செய்தவர்களை பிடித்த தாழம்பூர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் (பயிற்சி) திரு.செல்வராஜ், தலைமை காவலர் திரு.தணிகை மலை, முதல்நிலை காவலர் திரு.புருஷோத் குமார், தனிப்பிரிவு தலைமைகாவலர் திரு. இளையராஜா ஆகியோருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.