தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 14 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கில் 5 ஐந்து குற்றவாளிகளில் 2 பேர் கைது செய்யப்பட்டும், 2 குற்றவாளிகள் முன்ஜாமீன் பெற்றுள்ள நிலையில் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்து வந்த வழக்கின் முக்கிய குற்றவாளியை கடந்த 19.11.2021 அன்று கைது செய்த சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன், முதல் நிலை காவலர்கள் திரு. செல்லையா பாண்டியன் மற்றும் திரு.கதிரவன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆடு திருட்டு வழக்கில் காணாமல் போன 14 ஆடுகளையும், குற்றவாளிகள் இருவரை கைது செய்தும், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான 3 கார்களையும் பறிமுதல் செய்த விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கங்கைநாத பாண்டியன், முதல் நிலைக் காவலர் திரு. மகேந்திரன், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. பால்ராஜ் மற்றும் காடல்குடி காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. முத்துகாமாட்சி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே 24 கிலோ 100 கஞ்சா வைத்திருந்த குற்றவாளியை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. பென்சிங், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர்கள் திரு. மாணிக்கராஜா, திரு. மகாலிங்கம் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. சாமுவேல் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
மணப்பாட்டில் இருந்து ஒரு பெண்ணை காரில் கடத்தி செல்வதாக வான் செய்தி மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் வாகன சோதனை செய்து காரை மடக்கி பிடித்த புதியம்புத்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு.காந்தி செல்வம் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருட்டு வழக்கில் காணாமல் போன லாரி மற்றும் 2 குற்றவாளிகளையும் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்து வழக்கிற்கு உறுதுணையாக இருந்த முத்தையாபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் திரு. முருகன் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிடைக்கப்பெற்ற வான் செய்தி தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காரில் கடத்திச் சென்று தாக்கிய வழக்கில் குற்றவாளியை இருசக்கர வாகன ரோந்து பணியில் இருந்து துரத்தி சென்று மடக்கி பிடித்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சந்திரசேகரன் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
காவல் ஆய்வாளர் உட்பட 14 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.