சென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 608 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 608 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
தமிழக காவல்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் (Tamil Nadu Chief Minister’s Constabulary Medal), அந்தந்த காவல் நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை தி.நகர் மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலராக பணிபுரியும் திருமதி.பெ. சசிகலா அவர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடுகனூர் கிராமத்தில் பிறந்த பெண்காவலர் திருமதி. பெ. சசிகலா, கடந்த 23 ஆண்டுகளாக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் இவர், கடந்த மூன்று வருடங்களாக தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகின்றார். அங்கு புகார் கூற வரும் பெண்களிடம் மிகுந்த கனிவுடனுடன் விசாரித்து, அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி, உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, அவர்களின் பிரச்சனைகளுக்கு தகுந்த தீர்வுக்கு வழி காட்டுபவர். ஆதலால் அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.
திருமதி.பெ. சசிகலா வேகமும் விவேகமும் கொண்டு, செயல்படும் ஆற்றல் திறன் கொண்டவர். பல சாதனைகளைச் செய்து சோதனைகளை சுட்டு வீழ்த்தியவர். இவர் தனது திறமைகளை வெளிக்காட்டி பல காவல் நிலைய ஆய்வாளர்களிடம் பாராட்டுப் பெற்றது குறிப்பிடத்தக்கது. முடியாது எதுவும் இல்லை என்ற முனைப்பு இவரிடம், எப்போதும் காணப்படும். விடியாத பொழுதும் இல்லை, முடியாத செயலும் இல்லை, என்ற பொன்மொழி இவருக்கு பொருந்தும். கடந்த காலத்தில் கற்றதை வைத்து, நிகழ்காலத்தில் நித்தம் உழைத்தால், எதிர்காலத்தில் இனிமையாக வாழ முடியும் என்ற கொள்கையைக் கொண்டவர்.
பதக்கம் பெற்ற தி.நகர் மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலராக பணிபுரியும் திருமதி.பெ. சசிகலா அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே !
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை