சென்னை : சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது உறவினர்கள், சக நடிகர்கள், நண்பர்கள் என பலரும் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். சித்ரா தைரியமான பெண் என்பதால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கமாட்டார் என பலரும் தெரிவித்து வரும் நிலையில் நேற்று முதல் ஆர்.டி.ஓ. விசாரணை தொடங்கி உள்ளது. சித்ரா-ஹேமந்துக்கு பதிவுத்திருமணம் நடைபெற்ற 20 நாட்கள் மட்டுமே ஆவதால் போலீஸ் விசாரணை மட்டுமின்றி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையில் சித்ராவின் அம்மா, அப்பா, அக்கா, சீரியல் இயக்குநர், சக நடிகர்களிடம் ஆஜராகி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
கணவர் ஹேமந்த் மற்றும் அவரது தாய், தந்தை இன்று ஆஜராகும்படி ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ உத்தரவிட்டிருந்த நிலையில் நேற்றிரவு ஹேமந்த் கைது செய்யப்பட்டார். அதனால் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறும் விசாரணையில் வழக்கறிஞருடன் ஹேமந்தின் தாய், தந்தை மட்டும் ஆஜராகினர்.
நடிகை சித்ராவின் செல்போனில் இருந்த சில தகவல்கள் அழிக்கப்பட்டு இருப்பது, கணவர் ஹேமந்த் படப்பிடிப்பு தளத்தில் குடிபோதையில் தகராறு செய்தது, அடுத்த மாதம் ஊரரிய திருமணம் நடைபெற இருந்த நிலையில் சித்ராவிடம் வரதட்சணை கேட்கப்பட்ட விவகாரம், தாயாரிடம் சகஜமாக பேசிவிட்டு அடுத்த 5 நிமிடத்தில் தூக்கிட்டுக்கொண்டது, சித்ராவின் மற்றொரு செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்த பிரபலங்கள் என பல சந்தேகங்கள் இந்த வழக்கில் உள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடுத்தரக்குடும்பத்தில் பிறந்த சித்ரா கடந்த 2013ம் ஆண்டு சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அடியெடுத்து வைத்து படிப்படியாக உயர்ந்து சிறந்த நடிகை என்ற பெயரை எடுத்தவர். திடீரென கடந்த செவ்வாய்கிழமை இரவு சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் கணவருடன் தங்கியிருந்த போது புடவையால் தூக்கிட்டுக்கொண்டார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா