விருதுநகர் :கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் வர்த்தூர் பிரகாஷ் (65). இவர், அம்மாநிலத்தில் ஜவுளித்துறை அமைச்சராக இருந்தவர். கடந்த அக்.22ம் தேதி, அவருடைய கோலார் பண்ணை வீட்டுக்கு சென்று திரும்பும் வழியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அதன்பின் ரூ.44 லட்சத்தை பிணைத்தொகையாக பெற்றுக்கொண்டு, அக்.26ல் வர்த்தூர் பிரகாஷ் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக கர்நாடக போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். கடத்தலில் முக்கிய பங்கு வகித்த ரவிராஜ் என்பவர், விருதுநகர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக கர்நாடக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஏற்கனவே கைதான ரோகித் அலியாஸ் என்பவரை 16 போலீசார் விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள சுங்கச்சாவடிக்கு அருகே அழைத்து வந்தனர். அங்கிருந்து அவரை செல்போனில் பேச வைத்து ரவிராஜை வரவழைத்தனர். போலீசார் தன்னை பிடிக்க வந்ததை அறிந்த ரவிராஜ், ரோகித் அலியாசையும் ஏற்றிக்கொண்டு போலீசுக்கு டிமிக்கி கொடுத்து ஒரே காரில் தப்பித்துள்ளார். அவர்களை கர்நாடகா போலீசார் சினிமா பாணியில் துரத்தினர். குற்றவாளிகள் சென்ற கார், 20 கிமீ தூரமுள்ள இ.ரெட்டியபட்டியில் சாலையோர பள்ளத்தில் சிக்கியது. காரில் இருந்த ரவிராஜை போலீசார் கைது செய்தனர். ரோகித் அலியாஸ், காட்டுப்பகுதிக்கு தப்பிச்சென்று மாயமானார். ட்ரோன் கேமரா மூலம் அவரை தேடி வருகின்றனர்.