சென்னை, மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சுனிதா, பெ/வ.41, என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 21.5.2021 அன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த சுனிதா 23.5.2021 அன்று முதல் காணாமல் போன நிலையில், 08.6.2021 அன்று மேற்படி மருத்துவமனையின், டவர்-3, 8வது தளத்தில் அழுகிய நிலையில் சடலமாக இறந்து கிடந்தார்.
மேலும், இறந்த பெண் சடலம் காணாமல் போன சுனிதா என்பதை அவரது கணவர் மவுளி உறுதி செய்ததின்பேரில், சுனிதா மரணம் குறித்து C4 ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் (RGGGH P.S.) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
C-4 RGGGH காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்கொண்டதில், சுனிதா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேற்படி கொலையில் ஈடுபட்ட நபரை கண்டறிந்து கைது செய்ய, காவல் உயரதிகாரிகள் மேற்பார்வையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை செய்து வந்தனர்.
காவல்துறையினரின் தொடர் விசாரணையில், மேற்படி மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளாக துப்புரவு பணிக்காக ஒப்பந்தம் எடுத்துள்ள Crystal Company ஊழியராக துப்புரவு பணி செய்து வந்த ரதிதேவி என்ற பெண் ஊழியர் சம்பவத்தன்று சுனிதாவை அழைத்துச் சென்றது தெரியவர, காவல் குழுவினர் 15.6.2021 அன்று ரதிதேவியை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், ரதிதேவி, சுனிதா சிகிச்சை பெற்று வந்த மருத்தவமனையின் 3வது தளத்தில் துப்புரவு பணி மேற்கொண்டு வந்ததும், அப்பொழுது சுனிதா அவரது கைப்பையில் நிறைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததை கண்டு, அவற்றை அபகரிக்க திட்டமிட்டும், 23.5.2021 அன்று காலை ரதிதேவி, சுனிதாவிடம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி ஒரு வீல்சேரில் சுனிதாவை அமர வைத்து, பயன்பாடற்ற நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாத 8வது தளத்திற்கு அழைத்துச் சென்று, சுனிதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு ரதிதேவி மீண்டும் 3வது தளத்திற்கு வந்து, சுனிதாவின் கைப்பையில் இருந்த பணம் ரூ.9,500/- மற்றும் அவரது செல்போனை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
அதன்பேரில், ரதிதேவி, பெ/வ.40 திருவொற்றியூர் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுனிதாவின் செல்போன் கைப்பற்றப்பட்டது. மேலும் குற்ற எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.